பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் விபத்தில் பலியான 4–வது பயணி அடையாளம் தெரிந்தது


பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் விபத்தில் பலியான 4–வது பயணி அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 26 July 2018 4:45 AM IST (Updated: 26 July 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலை ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதி பலியான 4–வது பயணி அடையாளம் தெரிந்தது. விபத்துக்கு காரணமான தடுப்பு சுவரின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை உயர்அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார ரெயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் தடங்களில் இயக்கப்பட்டன.

இதனால் கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு காலை 7.05 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் மின்சார ரெயில் தாமதமாக காலை 7.40 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டது. இதனால் ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

பரங்கிமலையில் வழக்கமாக 2–வது நடைமேடையில் செல்ல வேண்டிய இந்த ரெயில் நேற்று முன்தினம் 4–வது நடைமேடையில் சென்றது. அப்போது பட்டிக்கட்டில் பயணித்த பலர், ரெயில் நிலையத்தின் பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவரில் மோதி தவறி விழுந்தனர்.

இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கி பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த நவீன்குமார் (23), கல்லூரி மாணவர் சிவக்குமார் (22), பள்ளி மாணவர் பரத் (17) உள்பட 4 பேர் உடல்சிதறி பலியானார்கள். மேலும் காயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோரிடம், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரால்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், அந்த சுவரை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ரெயில் விபத்து குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பலியான 4 பேரில் ஒருவர் மட்டும் அடையாளம் தெரியாமல் இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், பலியான 4–வது பயணி யார்? என்று நேற்று அடையாளம் தெரிந்தது. அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சின்னராஜ் என்பவருடைய மகன் வேல்முருகன் (25) ஆவார். இவர் கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் தங்கி, பிளம்பராக வேலை பார்த்து வந்தார் என தெரியவந்தது.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்ததால் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் ஒலிபெருக்கி மூலமாக, ‘‘படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம். அது ஆபத்தானது’’ என்று பயணிகளை எச்சரித்த வண்ணம் இருந்தார். ஆனாலும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்தனர்.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலியாகி உள்ளதால் சம்பவம் நடந்த 4–வது நடைமேடையை ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பவம் தொடர்பாக சுமார் 1 மணி நேரம் ரெயில்வே அதிகாரிகளிடம் ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் விசாரித்தார். மேலும் அவர், பரங்கிமலை ரெயில் நிலைய நடைமேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் ஆய்வு செய்தார்.

ஆய்வுகளை முடித்த பின்னர் ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடந்த விபத்துகளை நேரில் பார்த்த பயணிகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 30–ந் தேதி சென்னை டிவிசனல் கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் தங்கள் கருத்துகளை கூறலாம்.

பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ரெயிலில் பயணம் செய்தவர்கள் தங்கள் முதுகில் பைகளை தொங்கவிட்டபடி வந்ததுதான் விபத்துக்கான காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

தற்போது நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 12 பெட்டிகள் கொண்ட ரெயிலை இயக்குவதற்குத்தான் அனுமதி உள்ளது. கதவுகள் மூடப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பையில் ஒரு சில ரெயில்கள் மூடப்பட்ட கதவுகளுடன் இயக்கப்படுகிறது.

மின்தடை காரணமாகத்தான் ரெயில் 2–வது நடைமேடையில் இருந்து 4–வது நடைமேடைக்கு மாற்றி இயக்கப்பட்டது. பயணிகள் காலதாமதத்தால் அவதிப்படக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு இயக்கப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு மின்சார ரெயில் வந்த வேகம் சரியானதுதான். விசாரணையின் முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும்.

படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று ரெயில் நிலையங்களிலும், ரெயில் பெட்டிகளிலும் ஒலிபெருக்கி, ஸ்டிக்கர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 3–வது மற்றும் 4–வது நடைமேடைகளுக்கு இடையே உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவர், மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதனை அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு. ஆனால் அதனுடைய உயரம் மற்றும் அகலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4–வது நடைமேடையில் சாதாரண மற்றும் விரைவு ரெயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இந்த நடைமேடையில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story