சென்னை கேளம்பாக்கம் அருகே ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் ஆம்பூர் கோர்ட்டில் சரண்


சென்னை கேளம்பாக்கம் அருகே ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் ஆம்பூர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 27 July 2018 5:34 AM IST (Updated: 27 July 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கேளம்பாக்கம் அருகே ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் ஆம்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ஆம்பூர்,

காஞ்சீபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகை அருகே உள்ள நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் உதயா என்ற உதயராஜ் (வயது 28), பிரபல ரவுடி. உதயராஜும், அவரது நண்பர் பிரகாஷ் என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கத்தில் இருந்து கண்டிகையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தியுடன் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். ரத்தினமங்கலம் அருகே அந்த கும்பல் உதயராஜ், பிரகாஷ் ஆகிய 2 பேரையும் மடக்கி தாக்கினர். அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றபோது அவர்களை ரவுடி கும்பல் ஓட ஓட விரட்டியது. இதில் உதயராஜ் அந்த கும்பலிடம் மாட்டிக்கொண்டார். ரவுடி கும்பல் 5 பேரும் சுற்றிவளைத்து உதயராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த உதயராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உதயராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தாம்பரத்தை சேர்ந்த அரவிந்த் (25), சஜித் (25), ஓட்டேரி, வண்டலூர் 9-வது தெருவை சேர்ந்த செல்வா என்ற செல்வகுமார் (23) ஆகிய 3 பேரும் நேற்று ஆம்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மாஜிஸ்திரேட்டு ரூபனா 3 பேரையும் ஒரு நாள் நீதிமன்ற காவலில் அடைக்கவும், இன்று (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சரண் அடைந்த 3 பேரும் பலத்த போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே சரண் அடைந்தவர்கள் மீது பல்வேறு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சஜீத் மீது சித்தூர் மாவட்டத்தில் கொலை வழக்கு உள்ளது. இதனால் சித்தூர் மாவட்ட போலீசாரும் ஆம்பூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

Next Story