ஊட்டியில் திடீர் சோதனை: வியாபாரிகளிடம் இருந்து 11 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
ஊட்டியில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வியாபாரிகளிடம் இருந்து 11 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதையொட்டி ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
ஊட்டி,
நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1998–ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மேலும் பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. நடப்பு ஆண்டு முதல் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் திருமண மண்டபங்கள், கோவில்களில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், ½ லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இறைச்சி, மீன் விற்பனை கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை வாழை, தேக்கு இலைகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாக்கு மட்டையால் தயாரிக்கப்பட்ட தட்டுகளை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இதனிடையே நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில் கலால்துறை, தாசில்தார், நகராட்சி அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள 7 கடைகளில் நகராட்சி ஆணையாளர் ரவி (பொறுப்பு) தலைமையிலான சுகாதார அதிகாரி டாக்டர் முரளி சங்கர் உள்பட அலுவலர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். இதேபோல் மார்க்கெட்டில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகளில் 51 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தினர்.
பின்னர் பிளாஸ்டிக் தடிமானம் கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தினர். இதில் பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் 11 கிலோ இருப்பது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.