டச்சுப்படையை வென்ற தினம்: குளச்சல் போர் வெற்றி தூணுக்கு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மரியாதை


டச்சுப்படையை வென்ற தினம்: குளச்சல் போர் வெற்றி தூணுக்கு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மரியாதை
x
தினத்தந்தி 1 Aug 2018 4:00 AM IST (Updated: 31 July 2018 9:17 PM IST)
t-max-icont-min-icon

டச்சுப்படையை வென்ற தினத்தையொட்டி குளச்சலில் போர் வெற்றி தூணுக்கு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் வீர வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

குளச்சல்,

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது, டச்சுக்காரர்கள் திருவிதாங்கூரின் தலைநகராக விளங்கிய பத்மநாபபுரத்தை கைப்பற்ற திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் கப்பல்களில் கடல் மார்க்கமாக குளச்சல் கடல் பகுதியை வந்தடைந்தனர். இந்த திடீர் படையெடுப்பை முறியடிப்பதற்காக திருவிதாங்கூர் வீரர்கள் புதிய வியூகம் அமைத்தனர்.  

நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி அதன் மீது பனை மரத்தடிகளை வைத்தனர். இதை தொலைவில் இருந்து பார்க்கையில் பீரங்கிகளை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பது போன்று காட்சி அளித்தது.

இதனால், அச்சமடைந்த டச்சுப்படையினர் பின் வாங்க நினைத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருவிதாங்கூர் வீரர்கள், டச்சுக்காரர்களை சுற்றி வளைத்து சரணடைய வைத்தனர்.

குளச்சல் கடற்கரையில் சுமார் 2 மாதம் நடந்த இந்த போர் 1741–ம் ஆண்டு ஜூலை 31–ந் தேதி முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் நிறுவினார். இந்த தூண் மீது காணப்படும் சங்கு முத்திரையே இப்போதும் குளச்சல் நகராட்சி முத்திரையாக உள்ளது.

டச்சுப்படையை சரணடைய செய்து நேற்றுடன் 277 ஆண்டுகள் நிறைவடைந்தது. வெற்றி நினைவு நாளை முன்னிட்டு நேற்று மெட்ராஸ்(திருவிதாங்கூர்) 19–வது ரெஜிமெண்ட் படை வீரர்கள் இந்த வெற்றி தூணில் வீர வணக்கம் செலுத்தினர். மேலும், மாவட்ட கூடுதல்  கலெக்டர் ராகுல் நாத், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கமெண்டிங் ஆபீசர் கேனல் தினேஷ் சிங் தன்வார், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், நகராட்சி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் வெற்றி தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் ராணுவ தொடர்பு அதிகாரி தன்யா சனல், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், வின்சென்ட் அன்பரசி, குளச்சல் மறை வட்ட முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், ராணுவ வீரர்கள், கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story