காஞ்சீபுரம் எகாம்பரநாதர் கோவில் சாமி சிலை செய்ததில் முறைகேடு; அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது


காஞ்சீபுரம் எகாம்பரநாதர் கோவில் சாமி சிலை செய்ததில் முறைகேடு; அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 31 July 2018 11:00 PM GMT (Updated: 31 July 2018 5:09 PM GMT)

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சாமி சிலை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கும்பகோணம்,


தமிழகத்தில் சுமார் 36 ஆயிரத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் எந்தவித திருப்பணிகள் நடைபெற்றாலும் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று அதன்பிறகுதான் திருப்பணி வேலைகள் செய்ய முடியும்.

இதுபோன்ற அனுமதி வழங்க அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆணையர் நியமிக்கப்பட்டு அவரது ஒப்புதலின் பேரிலேயே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக(திருப்பணி) கவிதா என்பவர் பதவி வகித்து வருகிறார்.


கடந்த 2015–ம் ஆண்டு காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை பழுதடைந்து விட்டதால் புதிய சிலை செய்ய கவிதா அனுமதி வழங்கினார். இதனையடுத்து 50 கிலோ எடையில் ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக செய்யப்பட்ட சிலையில் அறநிலையத்துறை அனுமதியளித்ததில் 5 சதவீதம் அளவு கூட தங்கம் கலக்கப்படவில்லை என பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது. மேலும் உபயதாரர்கள் கொடுத்த தங்கத்தில் கோவில் அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார் எழுந்தது.


இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் கோர்ட்டில் அண்ணாமலை என்பவர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் அடிப்படையில் புதிய சிலை செய்ததில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்துக்கு எந்தவித கணக்கு வழக்குகளும் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.


தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலர்கள் புதிய சிலையை செய்வதற்கு அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக உள்ள கவிதாவுக்கு ரூ.5 லட்சம் பணம் லஞ்சமாக கொடுத்திருப்பதாக கோவில் அர்ச்சகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை நேற்று காலை அவருடைய வீட்டில் வைத்து கைது செய்தனர்.


இதனை தொடர்ந்து கவிதாவை சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் கோர்ட்டிற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் பிள்ளை கவிதாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

திருப்பணிப் பிரிவின் தலைமை அதிகாரியாக இருக்கும் கவிதாவின் கைது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story