வீடு வாங்கி தருவதாக பார்வையற்ற இளநிலை உதவியாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி டாக்டர்–புரோக்கர் கைது


வீடு வாங்கி தருவதாக பார்வையற்ற இளநிலை உதவியாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி டாக்டர்–புரோக்கர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 3:45 AM IST (Updated: 1 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

வீடு வாங்கி தருவதாக கூறி பார்வையற்ற இளநிலை உதவியாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த டாக்டர் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை சோலையழகுபுரம் நேரு நகரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 46). பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (44). கண் பார்வையற்றவர். இவர் மதுரை சம்பள கணக்கு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

திருநகர் ஜோசப்நகர் 4–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேல்ராஜா(48). அக்குபஞ்சர் டாக்டர். இவரது மனைவி சுமதி. திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் தங்கவேல்(56), புரோக்கர். இவர்கள் 3 பேரும் கண்பார்வையற்ற ஜெயக்கொடி மற்றும் கதிரவனுக்கு திருப்பரங்குன்றம் தேவிநகரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்த வேல்ராஜா மற்றும் தங்கவேலுவிடம் ஜெயக்கொடி அந்த வீட்டை தங்களுக்கு உடனடியாக வாங்கி தாருங்கள் என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் முறையான பதில் சொல்லாமல் தட்டி கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலைமிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மதுரை மாநகர் போலீஸ் கமி‌ஷனரிடம் ஜெயக்கொடி புகார் செய்தார். இதனையடுத்து கமி‌ஷனர் உத்தரவின் பேரில் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்ராஜா, தங்கவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் தலைமறைவான சுமதியை தேடி வருகின்றனர்.


Next Story