முன்விரோதத்தில் கொலை செய்ய திட்டம் எல்.ஐ.சி. முகவர் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்


முன்விரோதத்தில் கொலை செய்ய திட்டம் எல்.ஐ.சி. முகவர் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 31 July 2018 11:30 PM GMT (Updated: 31 July 2018 9:53 PM GMT)

முன்விரோதத்தில் எல்.ஐ.சி. முகவரை கொல்ல திட்டமிட்டு, அவருடைய வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடகு,

முன்விரோதத்தில் எல்.ஐ.சி. முகவரை கொல்ல திட்டமிட்டு, அவருடைய வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

எல்.ஐ.சி. முகவர்

குடகு மாவட்டம் மடிகேரி டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் வசித்து வருபவர் ஜனார்த்தனன். இவர் எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தமும் கேட்டு ஜனார்த்தனனும், அவருடைய குடும்பத்தினரும் விழித்தெழுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் வெளிப்புறம் உள்ள மின்விளக்குகளை போட்டுவிட்டு, வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. மேலும் அங்கு 2 துப்பாக்கி தோட்டாக்களும் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனார்த்தனன் உடனடியாக இதுபற்றி மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்கள், துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அது ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த நிலையில் நேற்று காலையில் சம்பவம் குறித்து அறிந்த மடிகேரி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் மேதப்பா மற்றும் தனிப்படை போலீசார் ஜனார்த்தனனின் வீட்டுக்கு சென்றனர். வீட்டைச்சுற்றி பார்வையிட்ட அவர்கள், சில தடயங்களையும் கைப்பற்றினர். மேலும் ஜனார்த்தனன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக யாரோ மர்ம நபர்கள் ஜனார்த்தனனை கொல்ல திட்டமிட்டு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அந்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story