மாநகராட்சி உதவி ஆணையாளரை மிரட்டிய அ.தி.மு.க. பகுதி செயலாளரை கண்டித்து போராட்டம்


மாநகராட்சி உதவி ஆணையாளரை மிரட்டிய அ.தி.மு.க. பகுதி செயலாளரை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:30 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி உதவி ஆணையாளரை மிரட்டிய அ.தி.மு.க. பகுதி செயலாளரை கண்டித்து போராட்டம் நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் பகுதி அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் கோவிந்தராஜ். இவர் தினமும் மாநகராட்சி 4–வது மண்டல அலுவலகத்துக்கு சென்று அங்கு அலுவலக பணியாளர்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும், துப்புரவு பணிக்கு செல்லும் தொழிலாளர்களை தகாத வார்த்தையால் பேசுவதாகவும், அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வேலை செய்யும்படி நிர்ப்பந்தித்தும் வந்து இருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் 4 பேரிடம் தகராறு செய்த அவர், அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநகராட்சி 4 மண்டல உதவி ஆணையாளர் அசோக்குமாரிடம் கூறி இருக்கிறார்.

கட்சி பிரமுகர் என்ற அடிப்படையில் அவரது கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட 4 பேரும் வேறு பகுதியில் துப்புரவு பணி செய்ய மாற்றம் செய்யப்பட்டனர். இது அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜுக்கு தெரியவந்தது. அவர் உதவி ஆணையாளர் அசோக்குமாரை சந்தித்து பேசினார். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், கோவிந்தராஜ் தகாத வார்த்தைகள் பேசி வேறு இடத்துக்கு மாறுதல் செய்து விடுவதாக உதவி ஆணையாளர் அசோக்குமாரை மிரட்டினார். மேலும், கடந்த ஜூலை 29 மற்றும் 30–ந் தேதி காலையில் 4–ம் மண்டல அலுவலகத்துக்கு சென்ற கோவிந்தராஜ், வருகை பதிவேட்டினை எடுத்து உதவி ஆணையாளரின் வருகையை ரத்து செய்து பதிவிட்டதாக தெரிகிறது.

இது ஏற்கனவே அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜ் மீது வெறுப்பில் இருந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் உதவி ஆணையாளர் வி.டி.அசோக்குமார் கூறி இருந்ததாவது:–

அ.தி.மு.க. பகுதி செயலாளர் கோவிந்தராஜ், தினசரி 4–ம் மண்டல அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அனைத்து பணியாளர்களையும் ஒருமையில் பேசுகிறார். மேலும், தான் சொல்லும் பணிகளை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள், பணியாளர்களை வற்புறுத்துகிறார். சட்டத்துக்கு புறம்பாக அவர் சொல்லும் பணிகளை செய்யவில்லை என்றால் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பதுடன், மாநகராட்சியின் தினசரி பணிகள் மற்றும் நடவடிக்கைகளில் தலையிட்டு நிர்வாகத்துக்கு இடையூறு செய்து வருகிறார்.

பணியாளர்களை தகாத வார்த்தை பேசுவதுடன் குடும்ப உறுப்பினர்களையும் மோசமாக திட்டி அனைவருக்கும் மனஉளைச்சல் ஏற்படுத்தி வருகிறார். இது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் இவர், ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் பெயரை உள்நோக்கத்துடன் தவறாக பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டியும், இடமாறுதல் செய்து விடுவேன் என்று அச்சுறுத்தியும் நிர்வாகத்தை சீர்கெடுத்து வருகிறார். தினசரி அடியாள்களுடன் வந்து அலுவலகத்தில் பணியாளர்களின் இருக்கையில் உட்கார்ந்து அராஜகம் செய்கிறார். கடந்த ஜூன் மாதம் குடிநீர் பணியாளர் பாலு என்பவர் பணியில் இருந்தபோது அவரை தாக்கினார். இதுதொடர்பாக அவர் மீது வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த(ஜூலை) 30–ந் தேதி 4–ம் மண்டல அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வந்து அத்துமீறி நுழைந்து பணியாளர்கள் வருகைப்பதிவேட்டினை எடுத்து வைத்துக்கொண்டு யாரும் கையொப்பமிடாமல் தடுத்தார்.

அன்று மாலை 5 மணி அளவில் நான் அலுவலகத்தில் இருந்தபோது என்னுடைய அறைக்குள் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்த கோவிந்தராஜ், அவர் சொல்கிறபடி நான் நடக்கவில்லை என்றால், சட்டமன்ற உறுப்பினரிடம் கூறி என் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினார். மேலும், அவர் கூறும் சட்டத்துக்கு புறம்பான முறையற்ற பணியை செய்யும்படி நிர்ப்பந்தித்தார். மேலும் என்னை ஒருமையில் பேசி தாக்க முயன்றார். எனது சத்தம் கேட்டு அலுவலக பணியாளர்கள் விரைந்து வந்து என்னை காப்பாற்றினார்கள்.

கோவிந்தராஜின் நடவடிக்கைகளால் 4–ம் மண்டலத்தில் உள்ள பணியாளர்கள் தினமும் பயந்து கொண்டே வேலை செய்ய வேண்டியது உள்ளது. எனவே அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கோவிந்தராஜ் மீத கடுமையான நடவடிக்கை எடுக்கவும், எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் உதவி ஆணையாளர் வி.டி.அசோக்குமார் கூறி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே ஈரோடு மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்களில் வேலை செய்து வரும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வந்து குவிந்தனர். அவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு 1000–க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலகங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம், ஈரோடு மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மாநகராட்சி நகர சுகாதார செவிலியர் சங்கம், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் என அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்த அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், முருகன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜகுமார், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் கொண்ட போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

உதவி ஆணையாளர்கள் அசோக்குமார், விஜயகுமார், சண்முகவடிவு, விஜயா உள்ளிட்ட அதிகாரிகள் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், வெங்கிடுசாமி, சண்முகம் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த அரசியல் கட்சியினரும் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நா.விநாயகமூர்த்தி, த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் போராட்டக்குழுவினரை சந்தித்தனர்.

இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் மற்றும் அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டு அறிந்தனர். பின்னர் பணியாளர்கள் தரப்பில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் குமரேசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது, சங்க நிர்வாகிகளின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை எம்.எல்.ஏ.க்கள் கவனமாக கேட்டனர். நிர்வாகிகள் பலரும் புகார் கூறும்போது, அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயரைக்கூறி மிரட்டுவதாக தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த கே.வி.ராமலிங்கம், இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும். தற்போது கோவிந்தராஜன் செய்த தவறை மன்னிக்க முடியாது. உங்கள் கோரிக்கைப்படி போலீசில் வழக்கு பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து ஊழியர்கள், முதல் தகவல் அறிக்கை போடப்பட்டதும் நாங்கள் கலைந்து செல்வோம். அதுவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்கள். எம்.எல்.ஏ.க்கள் புறப்பட்டு சென்ற பிறகும், போராட்டம் தொடர்ந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேனீர் மற்றும் உணவு அங்கேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாலையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்கு பதிவு செய்தார். கோவிந்த ராஜ் மீது அத்துமீறி நுழைதல், அநாகரிகமாக திட்டுதல், அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதல் தகவல் அறிக்கை நகலை போராட்டக்குழுவினரிடம் காட்டிய பிறகே அவர்கள் அலுவலக வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர். அவர் கைது செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக நேற்று மாநகராட்சியில் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை. துப்புரவு பணியாளர்கள் குப்பை அகற்றவும், சாக்கடை சுத்தம் செய்யும் பணி மற்றும் குடிநீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணி உள்பட எந்த பணியையும் செய்யவில்லை.


Next Story