கோவையில் பயங்கர விபத்து: பயணிகள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 6 பேர் உடல் நசுங்கி சாவு


கோவையில் பயங்கர விபத்து: பயணிகள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 6 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 2 Aug 2018 4:45 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் தறிகெட்டு ஓடி பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்ததில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.

கோவை,

கோவையில் நேற்று காலை சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

கோவை– பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை அருகில் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 10.20 மணிக்கு ஆண்கள், பெண்கள் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ரத்தினம் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமான சொகுசு கார் கோவையை நோக்கி அதிவேகமாக வந்தது. இந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் 10–க்கும் மேற்பட்டோரை நசுக்கிக்கொண்டு சென்ற கார் பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் மோதி அதனையும் தள்ளிக்கொண்டு மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது.மின் கம்பம் வளைந்தது.இந்த நிகழ்வுகள் காரின் அதிவேகத்தை உணர்த்தியது.கண் இமைக்கும் நேரத்தில் இந்த கோர விபத்து நடந்து முடிந்தது.

இந்த விபத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கார் அதிவேகத்தில் பாய்ந்து வருவதை பார்த்த பலர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காருக்கு அடியில் சிக்கி என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே பலர் பலியானார்கள். போர்க்களம் போல ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறி கிடந்தன. காயம் அடைந்தவர்கள் உயிருக்கு போராடினார்கள். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி கல்லூரி மாணவி உள்பட 6 பேர் பலியானார்கள்.

பலியானவர்கள் விவரம் வருமாறு:–

1. சுபாஷினி(வயது18), தந்தை பெயர் நாகராஜ், கல்லுக்குழி வீதி, குறிச்சி, சுந்தராபுரம். கல்லூரி மாணவியான இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தபோது உடல் நசுங்கி இறந்து போனார்.

2.நாராயணன்(70), தந்தை பெயர் வேலாயுதம், சுந்தராபுரம், கோவை. தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ரே‌ஷன் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு செல்லும்போது விபத்தில் சிக்கினார்.

3. ஸ்ரீரங்கதாஸ்(69), தந்தை பெயர் ஆறுமுகம், குறிச்சி, சுந்தராபுரம். இவர் சுமைதூக்கும் தொழிலாளி. வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றபோது விபத்தில் சிக்கினார்.

4. அம்சவேணி(34), கணவர் பெயர் சந்திரசேகர், பொள்ளாச்சி மெயின்ரோடு, சுந்தராபுரம், விபத்து நடந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்து வருகிறார்.

5.குப்பாத்தாள்(வயது70), கணவர் பெயர் நாகப்பன், அங்கனதேவர் வீதி, சுந்தராபுரம். இவர் ரே‌ஷன் கடையில் உணவு பொருட்களை வாங்குவதற்காக சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.

6. ருக்மணி(வயது65), கணவர் பெயர் பொன்னுகுட்டன், சுந்தராபுரம். கடைக்கு பொருள் வாங்க வந்தபோது விபத்தில் சிக்கி பலியானார்.

இந்த விபத்தில் சுந்தராபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம்(60), நடராஜ்(70), சுரேஷ்(42) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்தது குன்னூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீசன் (35) ஆவார். 6 பேரின் உயிரிழப்புக்கு காரணமான அவரை, பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.அவரை போலீசார் சிரமப்பட்டு மீட்டனர்.

விபத்தின்போது சொகுசு காரில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்புக்கான பலூன்கள் விரிந்ததால் டிரைவர் ஜெகதீசன் லேசான காயத்துடன் தப்பினார். பொதுமக்கள் தாக்கியதால் காயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் லட்சுமி, போக்குவரத்து துணை கமி‌ஷனர் சுஜித் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.இந்த பயங்கர விபத்து காரணமாக கோவை– பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதனை சரி செய்தனர். நசுங்கி கிடந்த ஆட்டோ, பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. சாய்ந்த மின்கம்பமும் சரி செய்யப்பட்டது.

டிரைவர் ஜெகதீசன், ரத்தினம் கல்லூரி நிர்வாகி மதன் செந்தில் என்பவரை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்காக காரை அதிவேகத்தில் ஓட்டி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். டிரைவர் ஜெகதீசன் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதைதொடர்ந்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

விபத்து குறித்து போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கூறியதாவது:–

அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்து இந்த விபத்து நடைபெற்றுள்ளது. எனவே கடுமையான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 304(2) என்ற சட்டப்பிரிவில்(உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசமான விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கமி‌ஷனர் பெரியய்யா கூறினார்.

கோவையில் நடைபெற்ற இந்த பயங்கர விபத்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Next Story