தூத்துக்குடியில், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் திடீர் சோதனை: வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி போதைப்பொருள் சிக்கியது


தூத்துக்குடியில், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் திடீர் சோதனை: வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி போதைப்பொருள் சிக்கியது
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 3 Aug 2018 11:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக அரசு ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திடீர் சோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 25–ந் தேதி போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் பதுக்கிய ரூ.1¼ கோடி மதிப்புள்ள ‘ஹசீஷ்‘ மற்றும் ‘சாரஸ்‘ என்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின்பேரில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி காந்திநகர் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் காந்திநகர் 5–வது தெருவில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோப்புக்கட்டிகள் போல்...

அப்போது அந்த நிறுவன அலுவலகத்தில் சாந்திநகரை சேர்ந்த அரசு ஊழியர் கார்த்திகேயன் (வயது 42), மில்லர்புரத்தை சேர்ந்த எடிசன் (35) ஆகியோர் இருந்தனர். மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 சாக்குமூட்டைகளை போலீசார் பிரித்து சோதனையிட்டனர்.

அதில் கஞ்சா நெடியுடன் கருப்புநிறத்தில் சோப்புக்கட்டிகள் போல் இருந்த பொருட்கள் சிக்கியது. அவற்றின் மீது செலோடேப் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 7 மூட்டைகளில் இருந்த 471 கிலோ எடை கொண்ட அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

போதைப்பொருள்

அங்கு செய்த பரிசோதனையில் அவை, ‘சாரஸ்‘ என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கார்த்திகேயன், எடிசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அந்த போதைப்பொருள் மற்றும் கைதான கார்த்திகேயன், எடிசன் ஆகிய 2 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராஜஸ்தானில் இருந்து இந்த ‘சாரஸ்‘ போதைப்பொருளை கொண்டு வந்ததும், அவற்றை காய்கறிகளுடன் சேர்த்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அந்த தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரையும் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story