போலீஸ் விசாரணையின்போது நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்வேன் - நடிகை சுருதி பேட்டி
போலீஸ் விசாரணையின்போது நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்வேன் என்று நடிகை சுருதி கூறினார்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 19). திருமணம் செய்வதாகக்கூறி பலரை ஏமாற்றி ரூ.2 கோடி மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதியை கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த அவருடைய வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேஷ், தாய் சித்ரா, சகோதரர் சுபாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அவர்கள் அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடிகை சுருதி கையெழுத்திட நேற்று காலை கோவை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மோசடி வழக்கில் என்னை போலீசார் கைது செய்து விசாரித்தபோது பாலியல்ரீதியாக துன்புறுத்தினார்கள். இதுகுறித்து நான் வெளியே சொன்னதும் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டே இருக்கிறது. அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து இரவு நேரத்தில் பேசுகிறார்கள். அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை.
இரவு நேரத்தில் பேசும் சிலர் என்னை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதனால் வெளியே வரகூட பயமாக இருக்கிறது. போலீசார் எனக்கு கொடுத்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளேன். இந்த விஷயத்தில் எனக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்.
நான் மேற்படிப்புக்காக லண்டனில் உள்ள வங்கியில் ரூ.23 லட்சம் சேர்த்து வைத்துள்ளேன். அந்த பணத்தை முடக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். அது நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம். எனவே அதை முடக்காமல் இருக்க சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.