சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட வழக்கு சுகாதார அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
சான்றிதழ் வழங்க ரூ. 1000–ம் லஞ்சம் கேட்ட வழக்கில் சுகாதார அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோரிட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை சமயநல்லூரில் உள்ள சுகாதார அலுவலகத்தில் கண்காணிப்பாளராக கடந்த 2012–ம் ஆண்டில் ரவிசங்கர் என்பவர் பணியாற்றினார். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவர் தனது பள்ளிக்கு சுற்றுப்புற சுகாதார சான்றிதழ் கேட்டு சமயநல்லூர் சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அவருக்கு சான்றிதழ் வழங்க ரூ.1,000–ம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரவிசங்கர் கேட்டுஉள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஜெயபால் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி 22.3.2012 அன்று ரவிசங்கரிடம் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரசாயனம் தடவிய நோட்டுக்களை ஜெயபால் கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த போலீசார் ரவிசங்கரை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு சார்பில் வக்கீல் பி.பாண்டியராஜன் ஆஜரானார். விசாரணை முடிவில் ரவிசங்கருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செங்கமலசெல்வன் தீர்ப்பளித்தார்.