ஈரோடு அருகே குண்டு காயத்துடன் விவசாயி பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
ஈரோடு அருகே துப்பாக்கி குண்டு காயத்துடன் விவசாயி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே பனங்காட்டுவலசில் உள்ள ஒரு வாய்க்கால் கரையோரம் நேற்றுமுன்தினம் காலை இடது கை மணிக்கட்டுக்கு மேல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே மோட்டார் சைக்கிளும், ஒரு நாட்டு துப்பாக்கியும் கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றினார்கள். இதுபற்றி விசாரித்தபோது பிணமாக கிடந்தவர், முள்ளாம்பரப்பு அருகே உள்ள நல்லாந்தொழுவை சேர்ந்த விவசாயி குமரேசன் (வயது 38) என்பது தெரியவந்தது.
அடிக்கடி நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு செல்லும் அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் அதிகாலை நாட்டு துப்பாக்கியுடன் மோட்டார்சைக்கிளில் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் நாட்டுத்துப்பாக்கி வெடித்து அவர் இறந்தாரா? அல்லது வேறு யாராவது அந்த நாட்டுத்துப்பாக்கியை அவரிடம் இருந்து பறித்து அவரை சுட்டார்களா? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரேசன் ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இறந்த குமரேசனுக்கு பிருந்தா (28) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.