சேர்வகாரன்பாளையம் காந்தி நகரில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும், மலைவாழ் மக்கள் மனு


சேர்வகாரன்பாளையம் காந்தி நகரில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும், மலைவாழ் மக்கள் மனு
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 7:03 PM GMT)

சேர்வகாரன்பாளையம் காந்தி நகரில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சப்–கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது சேர்வகாரன்பாளையம் காந்தி நகரை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சேர்வகாரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு கட்டிடங்கள் பழுது காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்து. தற்போது கட்டிடங்கள் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில் மழைநீர் வீட்டினுள் ஒழுகிறது. எனவே வீடுகளை விரைவாக சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றம் ஏற்படும் வகையில் ஆடு, மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் சுயஉதவிக்குழுவில் சேர்ந்து பணம் பெற்று வருகின்றோம். அந்த பணத்தை வாரம் மற்றும் மாதந்தோறும் திருப்பி செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் எங்கள் குழுவில் ஒரு பெண் பணத்தை வாங்கி கொண்டு மீண்டும் செலுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 16–ந்தேதி நள்ளிரவில் வீட்டை காலி செய்து செய்து எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. சுமார் ரூ.4 லட்சம் வரை கடன் பெற்று மோசடி செய்து உள்ளார். இதன் காரணமாக மற்ற குழுவில் உள்ளவர்கள் எங்களை பணம் செலுத்துமாறு கூறுகின்றனர். எனவே பணத்தை வாங்கி கொண்டு செலுத்தாமல் சென்ற அந்த பெண் மீது போலீசில் புகார் அளிக்க அனுமதி கோரியும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டனூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கிணத்துக்கடவு ஒன்றியம் சோழனூர் ஊராட்சிக்கு உட்பட்டது பழனிகவுண்டன்புதூர். இங்கு ஊராட்சி பொது குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து 10 நாட்கள் ஆகிறது. மேலும் 6–வது வார்டு அரிஜன காலனி மயானத்தில் புதர்கள் வளர்ந்து சுகாதார சீர்கேடு உள்ளது. மேலும் தெருவிளக்குகள் கடந்த 3 மாதமாக எரிவதில்லை.

ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து கிடக்கின்றது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story