உண்மையான சாதியை மறைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனதாக புகார்: உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்த உறவினருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


உண்மையான சாதியை மறைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனதாக புகார்: உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்த உறவினருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 9:30 PM GMT)

உண்மையான சாதியை மறைத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆனதாகக் கூறி உறவினர் மீது உள் நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை திருநகரைச் சேர்ந்த காசிரெட்டியார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது உறவினர் செல்வராஜன் நிலத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் சாதி சான்றிதழ் தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய சாதியை மறைத்து ‘பழங்குடியின கொண்டாரெட்டி‘ என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் நாங்கள் ‘இந்து ரெட்டி கஞ்சம்‘ என்ற சாதியை சேர்ந்தவர்கள்.

தான் பெற்ற ‘பழங்குடியின கொண்டா ரெட்டி‘ சாதி சான்றிதழ் மூலமாக தன்னுடைய மகள் நாகலட்சுமியை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதச்செய்து வெற்றி பெற வைத்துள்ளார். நாகலட்சுமி, தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

எனவே முறைகேடாக சாதி சான்றிதழ் பெற்று அரசுப்பணியாற்றி வரும் நாகலட்சுமி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை செல்வராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் புகார் செய்தேன். எந்த பதிலும் இல்லை. எனவே உண்மையை மறைத்து சாதி சான்றிதழ் பெற்ற தந்தை, மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, அனிதாசுமந்த் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரர் சொந்த தகராறு காரணமாக தன்னுடைய உறவினருக்கு மிரட்டல் விடுக்க உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்மனுதாரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதன் பின்னர் உரிய அனுமதி பெற்று தான் பழங்குடியின சாதி சான்றிதழ் வாங்கியுள்ளனர். எனவே தவறான நோக்கத்துடன் மனுதாரர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்காக மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை செல்வராஜன், அவரது மகள் நாகலட்சுமி ஆகியோருக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர்.


Next Story