படகு மீது கப்பல் மோதல்: மாயமான மீனவர்கள் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


படகு மீது கப்பல் மோதல்: மாயமான மீனவர்கள் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 10 Aug 2018 4:45 AM IST (Updated: 9 Aug 2018 8:25 PM IST)
t-max-icont-min-icon

படகு மீது கப்பல் மோதியதில் மாயமான குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

கேரள மாநிலம் கொச்சி அருகே முனம்பம் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகப் பகுதியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, கேரளா மற்றும் வெளிமாநில மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த மீனவர்கள் ஜேசுபாலன், ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், எட்வின், ஷாலு, யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ், மற்றொரு சகாயராஜ், மணக்குடியை சேர்ந்த வல்சன், அருண்குமார் ஆகிய 11 பேரும், கேரளாவை சேர்ந்த ஷைஜூ என்பவரும், கொல்கத்தாவை சேர்ந்த நரேன்சர்தார், பெபல்தாஸ் ஆகிய 2 பேருமாக மொத்தம் 14 பேர், கடந்த 7–ந் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் ராமன்துறையை சேர்ந்த ஜேசுபாலனுக்கு சொந்தமான விசைப்படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

அன்று அதிகாலை 2.45 மணி அளவில் அவர்கள் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மீனவர்களில் சிலர் விசைப்படகின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு தத்தளித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 பேரும் இறந்தது தெரியவந்தது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

மேலும் ராமன்துறையை சேர்ந்த எட்வின், கொல்கத்தாவை சேர்ந்த நரேன் சர்தார் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மீதி உள்ள 9 பேர் கடலில் மாயமாகி விட்டனர். 9 பேரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களில் 7 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கேரளாவை சேர்ந்த ஷைஜூ, மற்றொருவர் கொல்கத்தாவை சேர்ந்த பெபல் தாஸ் ஆவர்.

மாயமான மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தநிலையில் மாயமான 7 குமரி மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணைய முன்னாள் தலைவர் சேவியர் மனோகரன், ராமன்துறை பங்குத்தந்தை செல்வராஜ், மணக்குடி பங்குத்தந்தை கிளீட்டஸ் ஆகியோர் வந்தனர்.

பின்னர் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கேரளாவில் உள்ள முனம்பம் துறைமுகப் பகுதியில் இருந்து விசைப்படகில் 14 பேர் கடந்த 7–ந் தேதி இரவு 12.30 மணி அளவில் மீன்பிடிக்க சென்றனர். அன்று அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் கப்பல் ஒன்று மோதியதில் விசைப்படகு முழுவதுமாக மூழ்கி விட்டது. இதில் 3 பேர் பிணமாகவும், 2 பேர் உயிரோடும் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 9 பேர் விசைப்படகுடன் மூழ்கிவிட்டனர். ஏறக்குறைய 100 விசைப்படகுகள் சுற்றிநின்று தேடியும் வேறு யாரையும் மீட்க முடியவில்லை. காரணம் இவர்கள் அனைவரும் விசைப்படகின் உள்ளே மாட்டிக் கொண்டார்கள்.

இவர்களை மீட்க ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது கடலுக்குள் மூழ்கி சென்று விசைப்படகின் தாழிட்ட பகுதியை திறந்தால்தான் மீட்க முடியும். ஆகவே 9 பேரையும், மனைவி, மக்கள், உறவினர்கள் காணவும், இறுதிச்சடங்கு நடத்தி மனநிறைவு பெறவும் தாங்கள் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாயமான மீனவர்களில் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன், ராஜேஷ்குமார், ஆரோக்கியதினேஷ் ஆகிய 3 பேரும் அண்ணன், தம்பிகள் ஆவர். இவர்களது தாயாரும் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அவரும், மற்ற மீனவர்களின் உறவினர்களும் மனு கொடுத்தபோது கண்ணீர்விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story