மாவட்ட செய்திகள்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் + "||" + Condemned the absence of water Farmers demonstrated

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை,

கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஆகிய 4 ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் கல்லணைக்கால்வாய் பாசன கடைமடை பகுதிகளாகும். மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

இதைக்கண்டித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தநிலையில் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து நேற்று காலை முதல்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர். அப்போது கல்லணைக்கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் சிலர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கடைமடை பகுதிக்கு தண்ணீர் விட்டால் தான் கீழே இறங்குவோம் என கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் 13-ந் தேதிக்குள்(திங்கட்கிழமை) கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் விடப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பேரில் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்ற விவசாயிகள் கீழே இறங்கி வந்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.