ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது - காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்


ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது - காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 10:11 PM GMT)

வேலூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய காஞ்சீபுர மாவட்டத்தை சேர்ந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்சுதீன், கார்த்திகேயன் மற்றும் போலீசார் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு வாணியம்பாடி சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ஏராளமான அரிசி மூட்டைகள் இருந்தன.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது அவர் காஞ்சீபுரம் மாவட்டம் தேனாம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (வயது 35) என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா காவேரிப்பாக்கத்தில் வசித்து வந்ததும், காரில் பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

அதையடுத்து போலீசார் கார் மற்றும் அதில் இருந்த 22 மூட்டைகளில் 50 கிலோ என மொத்தம் 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பாலாஜியை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக பாலாஜி மீது வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தி வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு (சென்னை) ரூபேஷ்குமார்மீனா, வேலூர் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையின் நகல் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் பாலாஜியிடம் நேற்று போலீசார் வழங்கினர்.


Next Story