விருதுநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


விருதுநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 9:26 PM GMT)

விருதுநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் கலெக்டர் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மக்கள் மன்ற அமைப்பின் செயலாளர் ஈஸ்வரன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் தொழில் நகரமாக உள்ளது. விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். குறிப்பாக மாரியம்மன் கோவில், ரத வீதிகள், எம்.ஜி.ஆர். சிலை ரோடு, புல்லலக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் கடைகள், கட்டிடங்கள் என அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருப்பதால் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் விருதுநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது எனவும், விரைவில் முழுவதுமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Next Story