விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் அறிவிப்பு


விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 5:07 AM IST (Updated: 12 Aug 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு சிலைகள் வைப்பது தொடர்பாக அரசு சில முக்கிய நிபந்தனைகளை விதித்து உள்ளது.

சிலை வைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு முன்பு, சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். தனியார் இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் சிலை வைத்தால் உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் தடையில்லா சான்று பெற வேண்டும். சிலை வைத்தல் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பது தொடர்பாக போலீசாரிடமும், தற்காலிக பந்தல் அமைப்புகள் விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளது என தீயணைப்பு துறையிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும்.

சட்டவிரோதமாக மின் இணைப்பு எடுக்கக்கூடாது. எங்கு இருந்து மின் இணைப்பு எடுக்கப்படுகிறது என்பது குறித்து மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதுபோன்ற தடையில்லா சான்றுகளை சமர்ப்பித்து ஆர்.டி.ஓ.விடம் முன்அனுமதி பெற வேண்டும்.

பீடம் மற்றும் சிலையும் சேர்த்து 10 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் வைக்கக்கூடாது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும்.

சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலையில் 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் போர்வையில் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினரின் பெயர்களில் சிலை அமையும் இடத்தில் பெயர் பலகைகள் வைக்கக்கூடாது.

சிலை வைத்திருக்கும் பொழுது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பை சேர்ந்த 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டு தலங்களின் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. போலீஸ் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி துறை ஆகிய துறைகளால் அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்கப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டு 5 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும்.

வாகனங்களில் உரிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஊர்வலத்தில் செல்ல வேண்டும். சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஊர்வலப் பாதையில் பட்டாசு போன்ற வெடி பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. சிலைகள் கரைக்கப்பட்ட ஆறு, குளம் மற்றும் பிற நீர்நிலைகள் உள்ளாட்சித் துறையினரால் 2 நாட்களுக்குள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பதற்கு முன்பு உள்ள நீரின் தன்மையையும், சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர் உள்ள நீரின் தன்மையையும் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story