மருத்துவம்பாடி ஏரியில் மதகு சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தம் - விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
மருத்துவம்பாடி கிராம ஏரியில் மதகு சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி,
வந்தவாசியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் வந்தவாசி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் மருத்துவம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரி சுமார் 75 ஏக்கர் நிலங்களின் பாசன வசதியை கொண்டுள்ளது. ஏரி மீது அமைந்துள்ள தார்சாலை வழியாகத்தான் மருத்துவம்பாடி கிராமத்திற்கு சென்று வரவேண்டும். ஏரியின் கீழ்பகுதியில் கிராமம் அமைந்துள்ளது.
ஏரிக்கு 2 மதகுகள் சாலையோரமே அமைந்துள்ளது. 2 மதகுகளும் பழுதடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மதகை புதிதாக அமைக்க பொது பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து புதிதாக மதகு கட்டும் பணி நடந்தது. பணி முழுமை பெறாமல் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கவனிப்பார் இன்றி அப்படியே கிடக்கின்றது.
மதகு பகுதியில் அமைக்கப்பட வேண்டிய திருகு தடுப்பு கருவி அமைக்கப்படாமல் சாலையோரம் கிடக்கின்றது. இப்பணிக்காக பள்ளம் தோண்டும் போது அந்த வழியே சென்ற செய்யாற்று குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் குடிநீர் வீணாக ஏரியில் சென்ற வண்ணம் உள்ளது. குடிநீர் குழாய் உடைந்ததாலும் தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையாலும் மதகு ஓரம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமாக மாறி வருகிறது.
வட கிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் ஏரி மதகு முழுவதுமாக சீர் செய்யப்படாமல் உள்ளதால் மழைநீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஒரு மதகு சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் மற்றொரு மதகும் பழுதாக உள்ளது. மேலும் 2 மதகுகளின் கால்வாய்களும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
இதுபற்றி பொது பணித்துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வட கிழக்கு பருவமழை வருவதற்குள் மதகுகள் சீரமைக்கும் பணியை விரைந்து முடிப்பதோடு நீர் வெளியேறும் கால்வாய்களையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பொதுப்பணித்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story