வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகை-பணம் திருடிய கணவன், மனைவி கைது


வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகை-பணம் திருடிய கணவன், மனைவி கைது
x
தினத்தந்தி 13 Aug 2018 4:41 AM IST (Updated: 13 Aug 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகை-பணம் திருடிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி,

சிவகிரி இளங்கோ வீதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45). இவருடைய மனைவி பார்வதி (40). இவர்களுக்கு பூபதி (23), சிவா (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 9-ந்தேதி காலை பெரியசாமியும், பார்வதியும் புரசைமேட்டுப்புதூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றுவிட்டனர். சிவா சிவகிரியில் உள்ள கல்லூரிக்கு சென்றுவிட்டார். பூபதி வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் அன்று மதியம் பூபதி வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் 4½ பவுன் நகையை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்துகொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூபதி வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிவகிரி போலீசார் சிவகிரி அம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். பின்னால் ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். போலீசார் நிற்பதை கண்டதும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் வண்டியை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றனர். இதனை கவனித்த போலீசார் தங்களுடைய ஜீப்பில் விரட்டிச்சென்று மோட்டார் சைக்கிளை மடக்கினர். பின்னர் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் கரூர் மாவட்டம் வெங்கமேடு என்.எஸ்.கே. நகரை சேர்ந்த தர்மலிங்கம் (32), ரமணி (28) என்பதும், இவர்கள் 2 பேரும் கணவன்-மனைவி என்பதும் தெரிந்தது. மேலும் இவர்கள்தான் பெரியசாமி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியதும், இவர்கள் மீது வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தர்மலிங்கம், ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4½ பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story