என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: அண்ணன்–தம்பி உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: அண்ணன்–தம்பி உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Aug 2018 5:15 AM IST (Updated: 16 Aug 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரித்ததில் அண்ணனை கொன்றவரை வெட்டியதால் பழிதீர்த்தது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஆர்.கே.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 38). ஆட்டோ டிரைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை நாகராஜன் தனது குழந்தைகளை டியூசனுக்கு கொண்டு போய் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார்.

அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தி, வீச்சு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இதில் உடல் முழுவதும் படுகாயமடைந்த நாகராஜனை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பயங்கர கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அதே பகுதியை சேர்ந்த பிரபு நாராயணன், அவருடைய தம்பி பிரகாஷ், அல்லாகுண்டு மணிகண்டன், விக்கி உள்பட 5 பேர் சேர்ந்து நாகராஜனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல், நாகராஜன் குடும்பத்தினருக்கும், பிரபு நாராயணன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் நாகராஜனின் அண்ணன் கொலை செய்யப்பட்டார். தனது அண்ணனை கொலை செய்தவர்களை பழி தீர்க்க நாகராஜன் முடிவு செய்தார். இதையடுத்து பிரபு நாராயணனின் தம்பியான பிரகாசை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அவருடைய ஏற்பாட்டில் பிரகாசின் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. இதில் பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக நாகராஜனை எதிர் தரப்பினர் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

அவர்கள் 5 பேரும் கடலூர் தேவானாம்பட்டினத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதையடுத்து தனிப்படை போலீசார் தேவானாம்பட்டினத்திற்கு விரைந்து உள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசில் அவர்கள் பிடிபடும் போது நாகராஜன் கொலை சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story