நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை


நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2018 11:00 PM GMT (Updated: 19 Aug 2018 7:45 PM GMT)

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்,

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும்போது தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவு நீரை நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததையொட்டி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, வெள்ளம் இருகரையையும் தொட்டு செல்கிறது.

கடந்த சில நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதிகளை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக் கழிவுடன் சேர்ந்து வருவதால் கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் வருவதால், நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும்போது, காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீரின் கலரே தெரியாத நிலையில் உள்ளது.

இது சாயப்பட்டறை அதிபர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் வருவதால் நொய்யல் ஆற்றில் கலந்து இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டுமென நொய்யல் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story