வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி


வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Aug 2018 10:45 PM GMT (Updated: 19 Aug 2018 9:07 PM GMT)

நன்னிலம் அருகே வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கல்லடிமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாய கூலி தொழிலாளி. இவர் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீடு மிகவும் பழுதடைந்து விட்டதால் அருகில் ஒரு கூரை வீடு அமைத்து அதில் வசித்து வந்தார். சம்பவத்தன்று பழுதடைந்த அந்த தொகுப்பு வீடு இடிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் திருவாரூர் மருதபட்டினம் பகுதியை சேர்ந்த முருகவேல் மகன் கூலி தொழிலாளியான கதிரேசன் (வயது 25) என்பவர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூரை மீது ஏறி நின்று இடித்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கதிரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதிரேசனின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story