ரூ.5 கோடியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி அடுத்த மாதம் முடிவடையும் என அதிகாரி தகவல்


ரூ.5 கோடியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி அடுத்த மாதம் முடிவடையும் என அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Aug 2018 10:45 PM GMT (Updated: 19 Aug 2018 9:11 PM GMT)

நாகையில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணி அடுத்த மாதம் முடிவடையும் என அதிகாரி கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூரில் ஆண்டவர் தர்கா, சிக்கலில் சிங்கார வேலர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. மும்மத வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள நாகை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நாகை பகுதி பொதுமக்களுக்கு கோட்டை வாசலில் உள்ள துணை மின்நிலையம் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகி றது. இந்த துணை மின்நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி. மஞ்சக்கொல்லை, பரவை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் மின்சாதன பொருட்களின் அதிகரிப்பால் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டது. இதனால் கூடுதலாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து நாகை தெத்தி சாலையில் மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சாமுவேல் ராஜசேகரன் கூறியதாவது:-

கிராம பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாகை தெத்தி சாலையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த துணை மின்நிலையத்தின் மூலம் தெத்தி, வடகுடி, ஐவநல்லூர், பாலையூர், அழிஞ்சமங்கலம், செல்லூர், மஞ்சக்கொல்லை, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படும். இதனால் குறைந்த மின் அழுத்தம் சரிசெய்யப்படும்.

இந்த துணை மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி அடுத்த மாதம் (செப்டம்பர்) முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story