இளம்பெண்ணை காரில் கடத்தி செல்வதாக செல்போனில் புகார்


இளம்பெண்ணை காரில் கடத்தி செல்வதாக செல்போனில் புகார்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:15 AM IST (Updated: 21 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி செல்வதாக செல்போனில் புகார் வந்த அரை மணி நேரத்தில் போலீசார் காரை மடக்கி பிடித்தனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல்-பழனி சாலையில் ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப்பகுதியில் நேற்று காலை ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய இளம்பெண் ஒருவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டார். உடனே, அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த குமரன் என்பவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100-ஐ தொடர்பு கொண்டு இளம்பெண்ணை காரில் கடத்தி செல்வதாகவும், அந்த காரின் அடையாளத்தையும் கூறினார். அவர்கள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே திண்டுக்கல்- பழனி சாலையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்த அரை மணி நேரத்தில் ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையக்கோட்டை அருகே அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால், அவருடைய சகோதரர் அந்த பெண்ணை இடையக்கோட்டை அருகே உள்ள ஜவ்வாதுபட்டி மசூதிக்கு ஓதுவதற்காக அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் சிறுநீர் கழிப்பதற்காக சகோதரர் காரைவிட்டு இறங்கியபோது, அந்த பெண்ணும் இறங்கியதுடன் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டதும், இதைப்பார்த்த குமரன், இளம்பெண்ணை கடத்தி செல்வதாக சந்தேகப்பட்டு தகவல் கொடுத்ததும் தெரியவந்தது.

பின்னர், அந்த இளம்பெண்ணை சகோதரனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

Next Story