சிறுவலூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, கலெக்டரிடம் கோரிக்கை மனு


சிறுவலூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 21 Aug 2018 5:00 AM IST (Updated: 21 Aug 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

சிறுவலூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–

எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் அரசு பள்ளிக்கூடங்கள், கோவில்கள் உள்ளன. ஊரின் மைய பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த நிலையில் சிறுவலூர் கோபி ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறிஇருந்தனர்.

ஈரோடு ஸ்டோனிபாலம் அருகில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை சேர்ந்த மாணவர்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் விடுதியின் காப்பாளர், சமையலர் ஆகியோர் எங்களை படிக்க விடாமல் இடையூறு செய்கிறார்கள். அவர்கள் எங்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் தகாத வார்த்தையால் பேசுகிறார்கள். இதனால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தனர்.

அவல்பூந்துறை கண்டிகாட்டுவலசு கருமாண்டாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் இருந்து பண்ணைக்கிணறு செல்லும் வழியில் பழமை வாய்ந்த வெள்ளப்பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிலர் துர்கை அம்மன் பூஜை செய்து வருகிறார்கள். மேலும், ஒருவர் நள்ளிரவில் கோவிலுக்குள் சென்று நிர்வாணமாக பூஜை நடத்தி வருகிறார். அவர் உண்டியல் வைத்து தனிப்பட்ட முறையில் வசூல் செய்கிறார். எனவே துர்க்கை அம்மன் பூஜை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

சென்னிமலைபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘கடந்த 18–ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் எங்களது 7 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் 7 குடும்பங்களை சேர்ந்த சுமார் 30 பேர் தங்க இடமின்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும், 6 குடும்பத்தினருக்கு எக்கட்டாம்பாளையத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா உள்ளது. முத்துகுமார் என்பவரின் குடும்பத்திற்கு மட்டும் வீட்டுமனை பட்டா இல்லை. எனவே அவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கி, 7 குடும்பத்தினருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘‘ஈரோடு சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவு பாலம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது’’, என்று கூறப்பட்டு இருந்தது.

தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன், தடப்பள்ளி– அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி மற்றும் அரசியல் கட்சியினர், விவசாயிகள் பலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–

கடந்த 2007–ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு பவானிசாகர் அணை நிரம்பியது. கடந்த 10 நாட்களில் சுமார் 16 டி.எம்.சி. நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. ஆனால் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி ஆகிய வாய்க்கால்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும், 70 குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே அனைத்து வாய்க்கால்களின் மதகுகளை பழுது பார்த்து, கரையை பலப்படுத்த வேண்டும். பாசனத்தின் தேவைக்கு போக உபரிநீரை வாய்க்கால் வழியாகவே அவசரகால மதகுகளை திறந்து கசிவுநீர் குளத்தை நிரப்ப வேண்டும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மொத்தம் 171 கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நர்மதாதேவி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story