ரூ.50 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.33½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
சுல்தான்பேட்டை அருகே ரூ.50 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி, தொழில் அதிபரிடம், ரூ.33½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுல்தான்பேட்டை,
கோவையை அடுத்த சிங்காநல்லூரை சேர்ந்தவர் அருண்குமார் சுப்பையா (வயது 45). இவர், சுல்தான்பேட்டையை அடுத்த செஞ்சேரிமலை அடிவாரத்தில் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். அருண்குமார் சுப்பையா தனது தொழிலை விரிவுபடுத்த முடிவுசெய்தார்.
இதையடுத்து ரூ.50 கோடி பணம் கடனாக குறைந்த வட்டியில் தேவைப்படுவதாக, தன் நண்பரான கோவையை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பாஸ்கர் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த மோகன் (47), என்பவரை அருண்குமார் சுப்பையாவிடம் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் மோகன், தனது கூட்டாளிகளான திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முகுந்தன் (46), மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) ஆகியோருடன் வந்து அருண்குமார் சுப்பையாவுடன் பணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த, மார்ச் மாதம் முதல் பலமுறை அருண்குமார் சுப்பையாவை சந்தித்து கடன் கொடுப்பது தொடர்பாக பேசினர். பின்னர் கடன் பெற வேண்டுமானால், முன்பணம் தர வேண்டும் எனக்கேட்டுள்ளனர். இதை உண்மை என நம்பிய அருண்குமார் சுப்பையா, அவர்கள் கேட்ட ரூ.33 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
சில நாட்கள் கழித்து போனில் பேசிய மோகன், உங்கள் வீட்டின் முன் நிற்கும் சரக்கு வாகனத்தில் நீங்கள் கேட்ட பணம் முழுமையாக உள்ளது எனவும், இரு நாட்களுக்கு பின், எங்கள் ஆட்கள் வந்து பணத்தை எடுத்து தருவார்கள் என்று உள்ளார். அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அருண்குமார் சுப்பையா, அந்த சரக்கு வாகனத்தை திறந்து பார்த்தபோது அதில் எந்த பணமும் இல்லை. அவர்கள் ரூ.33½ லட்சத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்குமார் சுப்பையா, செல்போனில் மோகனை தொடர்பு கொண்டார். அப்போது அவர், மதுரை பக்கம் வந்தால், உயிருடன் திரும்ப முடியாது என, மிரட்டி உள்ளார். இதனை தொடர்ந்து அவர், சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் பிராங்ளின் (பொறுப்பு) தலைமையிலான போலீசார், மதுரை சென்று, மோகன், முகுந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை, சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக, மோசடி நபர்கள் இருவரிடம் இருந்து ரூ.1.15 லட்சம், 28 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களின் கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.