துண்டு துண்டாக வெட்டி உடல் குளத்தில் வீச்சு: கொலையான இளம்பெண் யார்? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


துண்டு துண்டாக வெட்டி உடல் குளத்தில் வீச்சு: கொலையான இளம்பெண் யார்? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி உடலை குளத்தில் வீசிய சம்பவத்தில் அவர் யார் என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய உடல் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் வைத்து குளத்தில் வீசப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அத்துடன் அந்த பெண் காலில் அணிந்து இருந்த மெட்டி வடநாட்டு பெண்கள் அணிவது போன்று இருந்தது. அவர் யார்? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் அந்த இளம்பெண் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன பெண்களின் பட்டியலை தேர்வு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த சுடிதார் மற்றும் அவர் அணிந்து இருந்த மெட்டி ஆகியவற்றின் புகைப்படங்களுடன் போலீசார் துண்டுபிரசுரம் அச்சடித்தனர்.

பின்னர் அந்த துண்டு பிரசுரத்தை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வெளிமாநிலங்களுக்கு அந்த துண்டு பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீசார் கூறியதாவது:–

கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் தலை, 2 கைகள் தனியாகவும், 2 கால்கள் தனியாகவும், கழுத்தில் இருந்து வயிறு வரை ஒரு பகுதியாகவும், வயிற்றில் இருந்து இடுப்பு பகுதி வரை என்று துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

அந்த இளம்பெண் பார்க்க வடமாநிலத்தை சேர்ந்தவர் போன்று இருப்பதால் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் வடமாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அந்த பெண் குறித்த விவரம் அடங்கிய துண்டு பிரசுரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே அந்தப்பகுதியை சேர்ந்த போலீசாரும், காணாமல்போன இளம் பெண்கள் குறித்த பட்டியலை அனுப்பி உள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story