மாணவர் தற்கொலை: கல்லூரி முதல்வர், 5 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு
மொடக்குறிச்சி அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் கல்லூரியின் முதல்வர், 5 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரியில், கொடுமுடி நடுப்பாளையம் அருகே சாணாம்புதூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20) என்பவர் 3–ம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தினேஷ்குமார் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதில் மனம் உடைந்ததாக கூறப்படும் தினேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தினால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் மாணவ–மாணவிகள் எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–
மாணவர் தினேஷ்குமார் எந்தவொரு விசாரணையும் இல்லாமல் 2–வது முறையாக கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்களை தகாத வார்த்தையில் பேசி வருகின்றனர். எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கல்லூரி உள்ளதால் நாங்கள் கல்லூரிக்கு செல்ல தாமதம் ஏற்படும். இதனால் எங்களை தகாத வார்த்தைகளில் கல்லூரியின் முதல்வரும், 5 பேராசிரியர்களும் பேசி உள்ளனர். மேலும், பெற்றோரை வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி உள்ளனர். மேலும், தினேஷ்குமாரின் இறுதி சடங்கில் பங்கேற்ற 10 மாணவர்களும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக தினேஷ்குமாரை போன்று மற்ற மாணவர்களும் தவறான முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே கல்லூரியின் முதல்வர், 5 பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.