கஞ்சா கடத்தி செல்ல முயன்ற நாமக்கல் வாலிபர் கைது


கஞ்சா கடத்தி செல்ல முயன்ற நாமக்கல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 4:15 AM IST (Updated: 26 Aug 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் இருந்து பஸ் மூலம் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்ற நாமக்கல் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்,

வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையிலான போலீசார் நேற்று காட்பாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒரு வாலிபர் 2 பெரிய பேக்குகளுடன் (டிராவல் பேக்) நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தார். அதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பேக்குகளை சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருந்தது.

விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த வடமலை மகன் செந்தில்குமார் (வயது 30) என்பதும், ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும், அதனை பஸ் மூலமாக திருப்பூருக்கு கடத்தி செல்வதற்காக காட்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story