நீலகிரியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமானது உள்பட மேலும் 11 விடுதிகளுக்கு ‘சீல்’
நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமானது உள்பட மேலும் 11 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானை வழித்தடத்தில் உள்ள விடுதிகளை அகற்ற வேண்டுமென ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 39 விடுதிகளில் 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் ‘சீல்’ வைக்கவும், மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரிபார்த்து அனுமதி இல்லையெனில் ‘சீல்’ வைக்கவும் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
அதன்படி முதல்கட்டமாக கடந்த 12–ந் தேதி 27 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன.
அப்போது அதில் 10 விடுதிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பொக்காபுரத்தில் உள்ள ஜங்கிள் அட் ரிசார்ட் மற்றும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான 2 விடுதிகளில் 16 கட்டிடங்களுக்கு முறையான அனுமதி இல்லை என்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 12 விடுதிகளும் உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை காலி செய்ய அதன் உரிமையாளர்களுக்கு 24 மணி நேர ‘கெடு’ விதித்து நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் ஒரு விடுதிக்கு மட்டும் ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று உயர் அதிகாரிகள் தலைமையிலான 3 குழுவினர் மீதமுள்ள 11 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான 2 விடுதிகளில் 16 கட்டிடங்கள் உள்பட 11 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
விடுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டதால், அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.