துண்டுதுண்டாக வெட்டி குளத்தில் உடலை வீசிய வழக்கு: இளம்பெண் கொலையில் முக்கிய வீடியோ ஆதாரம் சிக்கியது
கோவையில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி உடலை குளத்தில் வீசிய வழக்கில் முக்கிய வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அதை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் கிடந்தது. அவருடைய உடல் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் வைத்து குளத்தில் வீசப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்து உடலை குளத்தில் வீசியது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடிய வில்லை.
அந்த இளம்பெண் காலில் அணிந்து இருந்த மெட்டி வடமாநில பெண்கள் அணிவது போன்று இருந்ததால் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் போலீசார் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாயமான வடமாநில பெண்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்ட இளம்பெண் அணிந்து இருந்த சுடிதார், மெட்டி ஆகியவற்றின் புகைப் படங்களுடன் போலீசார் துண்டு பிரசுரம் அச்சடித்தனர். அதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநில போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அந்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
இந்த நிலையில், கோவை– சிறுவாணி ரோடு தெலுங்குபாளையம் பிரிவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 இளைஞர்கள் ஒரு இளம்பெண்ணுடன் நின்று கொண்டு இருந்ததாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாகவும், அதில் ஒருவர் நடக்கவே முடியாத அளவுக்கு மது அருந்தி இருந்தததும், அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஒரு இளம்பெண்ணை அழைத்து சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்றதற்கான முக்கிய வீடியோ ஆதாரமும் சிக்கி உள்ளது. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:–
தெலுங்குபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 25 வயதுக்கு உட்பட்ட 2 பேர், மோட்டார் சைக்கிளில் நடுவில் இளம்பெண்ணை அமர வைத்து சிறுவாணி ரோட்டில் இருந்து வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு ரோட்டோர கடையில் அமர்ந்து டீ குடித்து உள்ளனர். அப்போது இளைஞர்கள் 2 பேரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அந்த இளம்பெண் பேசவே இல்லை, அந்த இளம்பெண் பார்க்க சினிமா நடிகை போன்று அழகாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் அவர்கள் 3 பேரும் வந்தது தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த முக்கிய வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
அந்த வீடியோவில் தெரியும் அந்த இளம்பெண்தான் கொலை செய்யப்பட்ட நபராக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. எனவே அந்த 2 இளைஞர்கள் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண் தெளிவாக தெரிவதால், அதை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.