இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: மரஅறுவை ஆலை அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்த முடிவு


இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: மரஅறுவை ஆலை அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்த முடிவு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் மரஅறுவை ஆலை அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

கோவை,

இந்து முன்னணியின் கோவை மாநகர அமைப்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்து, கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (வயது 35), சதாம்உசேன் (27), சுபேர் (33), அபுதாகீர் (32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அத்துடன் இந்த கொலையில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில் ஒரு அமைப்பை சேர்ந்தவர்க ளுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதும், அவர்கள் 4 பேரும் தலைமறைவாக இருந்த போது அடைக்கலம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து அதிகாரிகள், அந்த அமைப்பை சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த நிலையில் கோவை காமராஜர் ரோடு சாய்பாபா காலனியை சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகன் முன்னா என்ற முகமது ரபிகுல்ஹசன் (30) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். அதுபோன்று கண்ணப்ப நகரில் உள்ள முன்னாவின் மரஅறுவை ஆலையிலும் சோதனை செய்யப்பட்டது.

சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் முன்னா வீட்டில் இருந்து செல்போன், சிம்கார்டுகள் உள்பட 21 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:–

சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஷாஜகானிடம் விசாரணை நடத்தினோம். அவருடைய மகன் முன்னாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்து அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் தனது மகன் கடந்த 2016–ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறினார்.

உடனே அவருடைய செல்போன் எண்ணை வாங்கி, அதற்கு தொடர்பு கொண்டு முன்னாவிடம் பேசினோம். வேலை நிமித்தம் காரணமாக உடனே வர முடியாது என்று அவர் கூறினார். எனினும் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை சம்மன் அனுப்பினோம். ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை. எனவே கோர்ட்டில் அனுமதி பெற்ற பின்னர்தான் அவருடைய வீடு, மரஅறுவை ஆலையில் சோதனை செய்யப்பட்டது.

மேலும் முன்னாவிடம் சில சந்தேகங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட அவரை தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் ஓமன் நாட்டில் உள்ளார். எனவே அவரை இந்தியா வரவழைத்து விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளோம். அதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சிலவற்றை ஆய்வு செய்ய ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வின் முடிவு வந்ததும், அந்த பொருட்கள் மற்றும் ஆய்வு குறித்த தகவல்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் வீடுகளிலும் சோதனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story