தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் “வைகை ஆற்றை காணவில்லை; மணலையும் பார்க்க முடியவில்லை” அன்புமணி ராமதாஸ் பேச்சு


தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் “வைகை ஆற்றை காணவில்லை; மணலையும் பார்க்க முடியவில்லை” அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 2 Sept 2018 5:00 AM IST (Updated: 2 Sept 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் வைகை ஆற்றை காணல்லை. மணலையும் பார்க்க முடியவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

மதுரை,

வைகை ஆற்றை காப்போம் என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து வைகை பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கிட்டு தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

பின்னர் கட்சியின் இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:–

தமிழக அரசுக்கு நீர் மேலாண்மை குறித்து எதுவும் தெரியவில்லை. அளவுக்கு அதிகமாக மழை பெய்த போதும், மக்கள் குடிநீருக்கு தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைகையில் ஆற்றை காணவில்லை, மணலையும் பார்க்க முடியவில்லை. இதற்கு 50 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை தான் காரணமாகும். மேகமலை பகுதியில் 1 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை அழித்து விட்டு, செடி வளர்த்து வருகின்றனர். இலவசங்களுக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு செய்கின்றனர்.

நீர் மேலாண்மைக்கோ ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவு செய்ய மறுக்கின்றனர். இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 45–க்கும் மேற்பட்ட மணல்குவாரிகள் உள்ளன. ஒரு யூனிட் மணல் ரூ.675–க்கு அரசால் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குவாரியில் 5 ஆயிரம் லோடுக்கு 3 ஆயிரம் லோடு மட்டுமே கணக்கு காட்டுகின்றனர்.

ஒரு லாரியில் 2 யூனிட் மணல் ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவுக்கு ரூ.50 ஆயிரம், கேரளாவுக்கு ரூ.55 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 8 மாதங்கள் மணல் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் தனியாருக்கு வருடத்துக்கு ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. அரசுக்கு வெறும் ரூ.86 கோடி மட்டும் செல்கிறது.

ஆற்று மணல் மூலம் வரும் ரூ.86 கோடியை மக்கள் கொடுத்துவிட்டால், மணல் குவாரிகளை அரசு மக்களுக்கு கொடுத்து விடுமா?. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.

இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கொடுக்க முடியும். இதை ஆணவத்தில் கூறவில்லை. வளர்ச்சித்திட்டங்கள் என்ன வேண்டும் என்பதை அறிந்த கட்சி என்பதாலும், இளைஞர்கள் மீதான அக்கறையில் என்பதாலும் சொல்கிறேன். ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்.

ஆறுகளை, கண்மாய்களை, நீர்நிலைகளை பாதுகாப்போம். வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை விட்டுச்செல்வோம். அடுத்த தலைமுறை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து ஆறுகளையும் பாதுகாப்போம். தமிழக இளைஞர்களே வாருங்கள், இயற்கை வளங்களை பாதுகாப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story