அருப்புக்கோட்டையில் கான்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை


அருப்புக்கோட்டையில் கான்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:15 PM GMT (Updated: 7 Sep 2018 3:48 PM GMT)

அருப்புக்கோட்டையில் உள்ள காண்டிராக்டர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்தவர், காண்டிராக்டர் செய்யாத்துரை. நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலை பணிகள், கட்டுமான பணிகள் போன்றவற்றை ஒப்பந்தம் எடுத்து தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இவரது நிறுவனம் சார்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடப்பதால் அங்கும் அவரது நிறுவன அலுவலகங்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஜூலை 16–ந்தேதி செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் அவரது அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் 20–க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 5 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சோதனையில் ரூ.120 கோடி, 100 கிலோ தங்கம், தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள செய்யாத்துரையின் மகன் நாகராஜனை அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது பறிமுதல் செய்த ஆவணங்களை அதிகாரிகள், செய்யாத்துரையின் அருப்புக்கோட்டை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்து சென்றனர்.

இந்தநிலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று 3 கார்களில் வந்த 10–க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகத்தில் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது அவரது அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையை அவரது மகன் நாகராஜனை வைத்து திறந்து ஆவணங்களை எடுத்தனர்.

பின்னர் முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்குகளை காட்டி செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன் ஆகியோரிடமும், செய்யாத்துரை ஆடிட்டரிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை நேற்றிரவு வரை தொடர்ந்தது. இதனால் அருப்புக்கோட்டையில் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


Next Story