பருப்பு மில் அதிபர்கள் கடன் மோசடி விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா? வங்கி அதிகாரிகள் முன்ஜாமீன் மனுதாக்கல்


பருப்பு மில் அதிபர்கள் கடன் மோசடி விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா? வங்கி அதிகாரிகள் முன்ஜாமீன் மனுதாக்கல்
x
தினத்தந்தி 7 Sep 2018 11:00 PM GMT (Updated: 7 Sep 2018 6:21 PM GMT)

விருதுநகர் பருப்பு மில் அதிபர்கள் தொழிலாளர்களின் பெயரில் வங்கி கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் உடந்தையாக இருந்ததா கூறப்படும் வங்கி அதிகாரிகள் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

விருதுநகர்,

விருதுநகரை சேர்ந்த பருப்புமில் அதிபர்கள் வேல்முருகன்(வயது 65), செண்பகம்(55) ஆகிய 2 பேரும் விருதுநகரை சேர்ந்த பல கூலி தொழிலாளர்களின் பெயரில் தேனி மாவட்டத்தில் உள்ள பல வங்கி கிளைகளில் விளை பொருட்கள் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகம், பருப்பு மில்லில் வேலை பார்த்த கலைச்செல்லி, இடைத்தரகர்கள் சன்னாசி, சோலைராஜ் ஆகியோர் தென்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக கோவையில் ஆடிட்டராக இருக்கும் செண்பகத்தின் மகள் இந்துமதி, அவரது கணவன் விமல்குமார் ஆகிய 2 பேரும் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனார்.

வங்கி கிளைகளில் தொழிலாளர்களின் பெயருக்கு எவ்வித முறையான ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் ஒரேநாளில் வங்கி கணக்கை தொடங்கி லட்சக்கணக்கில் கடன் தொகை அனுமதித்துள்ளதால் வங்கி அதிகாரிகளும் இந்த கடன் மோசடியில் உடந்தையாக இருந்திருக்கலாம் என போலீசார் வங்கி அதிகாரிகள் 3 பேருக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்தநிலையில் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் உள்பட 3 பேர் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தென்கரை போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு விசாரணையை இந்த மாதம் 19–ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பருப்பு மில் அதிபர்கள் 2 பேரும் தேனி மாவட்டத்தில் வேறு அரசு வங்கி கிளைகளிலும், விருதுநகர் மற்றும் கோவில்பட்டி வங்கி கிளைகளிலும் மோசடியாக கடன் பெற்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த வங்கி கிளைகளில் இருந்து கடன் பட்டியலில் உள்ள தொழிலாளர்களின் பெயருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் போது தான் இது தொடர்பான முழு விவரம் தெரிய வாய்ப்புள்ளது. இப்பிரச்சினை குறித்து வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

அரசு வங்கிகளில் வாராக்கடன் மற்றும் கடன்மோசடி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி இது குறித்து அனைத்து வங்கி நிர்வாகத்துக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் வங்கிகளில் ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடி வரை கடன் மோசடி நடைபெற்றதாக தெரியவந்தால் அது குறித்து சி.பி.ஐ. வங்கி பிரிவு விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அந்த வகையில் விருதுநகர் பருப்பு மில் அதிபர்கள் செய்துள்ள கடன் மோசடி விவகாரமும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு வங்கி கிளைகளில் இந்த மோசடி நடைபெற்று இருப்பதால் ஒட்டுமொத்தமாக அனைத்து மோசடி தொடர்பாகவும் மாநில அளவிலான சிறப்பு போலீஸ் விசாரணை அமைப்பான சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் இந்த வழக்கு விசாரணையை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த வழக்கு விசாரணை சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றப்படும் போது வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் சிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.


Next Story