ரெயில் மீது ஏறி ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி
ரெயில் மீது ஏறி நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் மீது மின்கம்பி உரசியதால் உடல் கருகி பலியானார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்த சசிதரன் என்பவருடைய மகன் ஸ்ரீஹரி (வயது 18). இவர் கோவையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். ஸ்ரீஹரி தனது நண்பர்கள் 5 பேருடன் டீ குடிப்பதற்காக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வெளியே சென்றார்.
அவர்கள் பீளமேடு ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது அங்கு கோவையை நோக்கி வந்த சரக்கு ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டு இருந்தது.
ஸ்ரீஹரி அந்த சரக்கு ரெயில் மீது ஏறி செல்பி எடுப்பதற்காக ரெயிலில் இருந்த படிக்கட்டு மீது ஏறினார். அவருடைய நண்பர்கள் வேண்டாம் என்று கூச்சலிட்டும் அதை பொருட்படுத்தாமல் ரெயில் மீது ஏறி நின்று செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.
அப்போது அங்கு மேலே சென்ற உயரழுத்த மின்சார ஒயர் ஸ்ரீஹரியின் தலையில் உரசியதாக தெரிகிறது. உடனே அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த நண்பர்கள் ஸ்ரீஹரியின் உடலை பார்த்து கதறி அழுதனர். கோவை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ஸ்ரீஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.