கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது - மதுபோதையில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை


கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது - மதுபோதையில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 8 Sep 2018 10:58 PM GMT (Updated: 8 Sep 2018 10:58 PM GMT)

நாகர்கோவிலில் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. அவர், மதுபோதையில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பெருவிளை பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிணமாக கிடந்தவரது கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் நீலசாமி என்ற நீலத்தங்கம் (வயது 45). இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பெருவிளை. தாயார் இறந்து விட்டார். தந்தை பால்நாடார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக உள்ளார். திருமணமாகாத நீலசாமி ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் பகுதியில் தன்னுடைய அக்காள் அமராவதியுடன் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வந்த நீலசாமி மதுகுடிக்கும் பழக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவர் கூலி வேலைக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த நீலசாமியின் உடலை, அவரது அக்காள் அமராவதி அடையாளம் காட்டினார்.

பிணமாக கிடந்தவர் அடையாளம் காணப்பட்டவுடன், கொலை எப்படி நடந்து இருக்கலாம் என்றும், கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நீலசாமி மதுகுடித்து விட்டு அந்த பகுதியில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். எனவே மதுபோதை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மதுகுடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story