முழு அடைப்பு என்பது மக்களை ஏமாற்றும் வேலை: காங்கிரஸ் மீது அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு


முழு அடைப்பு என்பது மக்களை ஏமாற்றும் வேலை: காங்கிரஸ் மீது அன்பழகன் எம்.எல்.ஏ. தாக்கு
x
தினத்தந்தி 10 Sept 2018 5:00 AM IST (Updated: 10 Sept 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்– டீசல் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததே காங்கிரஸ் தான். எனவே முழு அடைப்பு போராட்டம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து காங்கிரஸ் கட்சி முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு தி.மு.க.வும் ஆதரவு அளித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்று கொள்கை முடிவு எடுத்தவர்களே இவர்கள்தான்.

அப்போது இந்த முடிவினை வரவேற்ற முதல்–அமைச்சர் நாராயணசாமி இப்போது எதிர்க்கிறார். அவருக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால் புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்கவேண்டும். இவர்களது போராட்டத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையப்போவதில்லை.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 26 மாதங்கள் ஆன நிலையில் 10 மாதம்தான் இலவச அரிசி போடப்பட்டுள்ளது. 16 மாதங்கள் ஏன் அரிசி போடவில்லை என்று கேட்டால், முறையற்ற டெண்டர், தரமற்ற அரிசி வழங்கியதுதான் காரணம் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். இனிமேல் தவறாமல் அனுமதியளிப்பேன் என்று அவர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

முறையற்ற டெண்டர், தரமற்ற அரிசி என்றால் அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம். அப்படி அவர் எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்? இதை கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். மாதந்தோறும் அரிசி வழங்காவிட்டால் அதற்கான பணத்தை வழங்க வேண்டியதுதானே? அவர் சொல்லும் காரணம் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியை மிரட்டுவதுபோல் உள்ளது.

புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கலாசார சீரழிவினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் புதுவை மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை உள்ளது. அழகுநிலையங்கள், ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் விபசாரம் நடக்கிறது. மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதால் சமூக விரோதிகள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து செல்கின்றனர்.

எனது தொகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கலாசார நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் நடக்கிறது. அங்கு இளம்பெண் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு பாலியல் தொந்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

கவர்னர், டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு என அனைத்து தரப்பினரும் பெண்களாக இருந்தும் இதுபோன்று நடக்கிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story