காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்: மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 391 பேர் கைது
முழு அடைப்பு போராட்டத்தால் ஈரோட்டில் பாதிப்பு இல்லை. காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்டதாக 391 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
பெட்ரோல்–டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டு கட்சிகளும் அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவு அளித்தன. அதன்படி நேற்று இந்தியா முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டத்திலும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன. இதை முன்னிட்டு ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவே பஸ் நிலையம், ரெயில் நிலையம், போக்குவரத்து பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை முதலே அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல ஓடின. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கின. அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கூடங்களில் பாதிப்பு எதுவுமின்றி இயங்கின.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஸ் ராஜப்பா, விஜயபாஸ்கர், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் அயூப் அலி, ஜாபர் சாதிக், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கண்ணப்பன், சிவாஜி கணேசன், மாதேஷ்வரன், சச்சிதானந்தம், சபீர் அகமது, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கே.என்.பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தி.முக. சார்பில் மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பகுதி செயலாளர் பொ.ராமு என்கிற ராமச்சந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொழிற்சங்க தலைவர் ஜெகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, நிர்வாகிகள் அம்ஜத்கான், பைசல் அகமது, சாஜித், திராவிடர் கழக மண்டல அமைப்பு செயலாளர் த.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நூர்சேட், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதுபோல் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஆகிய கட்சிகள் சார்பில் ஈரோடு பஸ்நிலையம் பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக பஸ்நிலையத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், சோசியல் யூனிடி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி எஸ்.டி.பிரபாகரன், மாதர் சங்க பொறுப்பாளர்கள் பிரசன்னா, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போராட்டக்குழுவினர் பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறி மேட்டூர் ரோடு பகுதிக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் போராட்டக்குழுவினரை தடுத்து சாலை மறியல் செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்தனர். தடையை மீறிய போராட்டக்குழுவினர் நடுரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரையும் போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினார்கள். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 82 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுபோல் பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். கோபியில் 5 பெண்கள் உள்பட 35 பேரும், சத்தியமங்கலத்தில் 16 பெண்கள் உள்பட 67 பேரும், பெருந்துறையில் 7 பெண்கள் உள்பட 45 பேரும், சென்னிமலையில் 18 பேரும், அந்தியூரில் ஒரு பெண் உள்பட 30 பேரும், கடம்பூரில் 1 பெண் உள்பட 37 பேரும், தாளவாடியில் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியல் போராட்டங்களில் 41 பெண்கள் உள்பட 391 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடை அடைப்பை பொறுத்தவரை ஈரோடு மாநகர் பகுதியில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆனால், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதி மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் எந்த பாதிப்பும் இன்றி இயங்கின.
மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.