மங்கலம் அருகே பிளாஸ்டிக் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து 2½ வயது குழந்தை கொலை? போலீசார் விசாரணை


மங்கலம் அருகே பிளாஸ்டிக் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து 2½ வயது குழந்தை கொலை? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Sep 2018 11:45 PM GMT (Updated: 10 Sep 2018 4:25 PM GMT)

மங்கலம் அருகே பிளாஸ்டிக் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து 2½ வயது குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்கலம்,

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் திருப்பூரை அடுத்த சாமளாபுரம் தோட்டத்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ் இசக்கி (21). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்யும்போது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் இருந்தாள்.

நாகராஜ் குடியிருக்கும் வீட்டையொட்டிய மற்றொரு வீட்டில் நாகராஜின் தந்தை பழனிசாமியும், தாயார் தனலட்சுமியும் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனலட்சு துக்கம் விசாரிக்க முசிறி சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் நாகராஜியும், பழனிசாமியும் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் தமிழ் இசக்கியும், அவருடைய 2½ வயது மகள் சிவன்யாஸ்ரீ ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இதற்கிடையில் வெளியூர் சென்று இருந்த தனலட்சுமி நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது தான் புதியதாக வாங்கி வந்து இருந்த துணியை அந்த குழந்தைக்கு போட்டுள்ளார். அந்த குழந்தை தினமும் தூங்கும் முன்பு பால் குடித்து விட்டு அதன்பின்னரே தூங்கும் பழக்கம் கொண்டது. எனவே பேத்திக்கு தனலட்சுமி பால் கொடுத்தார். பின்னர் அந்த குழந்தை தூங்கியதும் தனலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்து இருந்தார். அப்போது நாகராஜ் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் சென்ற போது அங்குள்ள கட்டிலில் வாயில் நுரை தள்ளிய நிலையில் சிவன்யாஸ்ரீ மயக்கமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ், உடனே தனது தாயாரிடம் தகவல் கூறினார். இதனால் பதறித்துடித்த தனலட்சுமி வேகமாக ஓடிவந்து பார்த்தபோது, சிவன்யாஸ்ரீயின் உடல் முழுவதும் ஈரமாக இருந்தது. இதையடுத்து சிவன்யாஸ்ரீயை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை சிவன்யாஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மங்கலம் போலீசார் விரைந்து சென்று குழந்தை சிவன்யாஸ்ரீயை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சிவான்யாஸ்ரீயின் பாட்டி தனலட்சுமி மங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் உள்ள தண்ணீரில் குழந்தை மூழ்கி கொலை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். மேலும் தமிழ் இசக்கியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகிறார்கள். பால் குடித்த குழந்தை சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story