சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் பேரணி


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் பேரணி
x
தினத்தந்தி 18 Sept 2018 5:08 AM IST (Updated: 18 Sept 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் பேரணி நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் நேற்று பேரணி நடைபெற்றது. வக்கீல்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும். இந்திய உயர் கல்வி ஆணைய மசோதா மூலம் வக்கீல் குழுமத்தின் அதிகாரத்தை நீர்த்து போக செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.

வக்கீல்களுக்கு காப்பீடு மற்றும் கோர்ட்டில் இருக்கை வசதி ஆகியவை செய்து தருவது அவசியம். ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு வேறு எந்தப் பணிகளும் வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் ஜோஸ் பெனடிக்ட் தலைமை தாங்கினார். செயலாளர் பிரதாப், வக்கீல்கள் பலவேசமுத்து, புஷ்பதாஸ், சுரேஷ், தினேஷ், ராதாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி டதி பெண்கள் பள்ளி சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று முடிவடைந்தது.

பேரணியில் நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மனாபபுரம் மற்றும் குழித்துறை ஆகிய கோர்ட்டுகளில் பணியாற்றும் வக்கீல்களும் பங்கேற்றனர். இந்த பேரணியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 5 கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணி முடிந்ததும் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Next Story