கோவை நீலாம்பூரில் சூதாட்ட கும்பல் கைது முன்னாள் கவுன்சிலர் உள்பட 20 பேரிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்


கோவை நீலாம்பூரில் சூதாட்ட கும்பல் கைது முன்னாள் கவுன்சிலர் உள்பட 20 பேரிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:24 PM GMT (Updated: 2018-09-23T03:54:52+05:30)

கோவை நீலாம்பூரில் மெகா சூதாட்டம் நடத்திய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடம் இருந்து 11 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூலூர்,

கோவை நீலாம்பூர் அருகே உள்ளது ஆச்சான் குளம். இங்கு மீனவர்கள் வலைகளை பாதுகாக்க பயன்படுத்தும் அறையை உடைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சூலூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர்.

அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சூலூர் குளத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மாரிக்குட்டி, கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த துரைராஜ், ஆர்.எஸ். புரம் கண்ணா, ரத்தினபுரி ராஜசேகர், வெள்ளானப்பட்டியை சேர்ந்த முத்துக்குமாரசாமி, ரஞ்சித் உள்பட 20 பேரை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரொக்கப்பணம், 4 சொகுசு கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 20 பேரையும் கைது செய்து அவர்களிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான கும்பல் சூதாடுவதற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் வீடுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, சூதாட்டம் முடிந்ததும் வீடுகளை திறந்துவிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story