மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை; போதை பொருட்கள் பறிமுதல்


மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை; போதை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sept 2018 5:30 AM IST (Updated: 23 Sept 2018 8:07 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மத்திய சிறையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை,

சென்னை புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் டி.வி.க்கள், ரேடியோ, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பொருட்கள் அனைத்தும் சிறைக்குள் எப்படி வந்தன? என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து சில கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதன் எதிரொலியாக கோவை, திருச்சி, பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் போலீசார் அடுத்தடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் மதுரை மத்திய சிறையில் சோதனை நடத்துவதற்காக சிறைத்துறை மதுரை சரக டி.ஐ.ஜி. பழனி தலைமையில் போலீஸ் துணை கமி‌ஷனர் அருண்பாலகோபாலன், உதவி கமி‌ஷனர் வெற்றிச்செல்வம் மற்றும் 150–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 6 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள், சிறையின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையில் மோப்ப நாய் பிரிவும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களும் போலீசாருடன் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதுபோல், பெண்கள் தனி சிறையிலும் பெண் போலீசார் மூலம் சோதனை செய்யப்பட்டது.

காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 2 மணி நேரம் நடந்தது. கூர்மையான மரக்குச்சிகள், ஊசிகள், ஆணிகள், பிளேடுகள், இரும்பு துண்டுகள், பீடி, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை சிறையில் இதுபோன்ற அதிரடி சோதனை வரும் காலங்களிலும் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story