வாக்காளர் பட்டியலில் மலைவாழ் மக்களை சேர்க்க சிறப்பு குழுக்கள் - தேர்தல் அதிகாரி தகவல்


வாக்காளர் பட்டியலில் மலைவாழ் மக்களை சேர்க்க சிறப்பு குழுக்கள் - தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 Sept 2018 4:15 AM IST (Updated: 30 Sept 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தாசில்தார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வேலூர்,

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்தல் குறித்த சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வேலூர் மாவட்டம் முழுவதும் 1,681 இடங்களில் நடைபெற்றது. அடுத்த மாதம் (அக்டோபர்) 7, 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் மலைவாழ் மக்களை சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்கள், பழங்குடியினர், கல்வியறிவு இல்லாத மக்களை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக சேர்க்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் தாசில்தார் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கோடு தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மலைவாழ் மக்கள், பழங்குடியினர், கல்வியறிவு இல்லாத மக்கள், நாடோடி வாழ்க்கை வாழும் மக்கள் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

எனவே அவர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள் கண்டறியப்பட்டு அந்த கிராமங்களுக்கு சென்று இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 13 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்களில் புதிய வாக்காளர்களை கண்டறிந்து வருகின்றனர். நாடோடியாக வாழ்ந்து வரும் மக்களின் முகவரி மாற்றப்பணியையும் இந்த குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

Next Story