கோத்தகிரியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது

கோத்தகிரியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி– குன்னூர் ரோட்டில் பாண்டியன் பார்க் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தப்படுவதாக கோத்தகிரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர்கள் நசீர், கவுதம் ஆகியோர் நேற்று மாலை 6 மணியளவில் அந்த ரேஷன் கடைக்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 4 பேர் ஒரு காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை துரத்தி பிடித்தனர். இதற்கிடையே ரேஷன் கடையின் முன்பு நின்றிருந்த லாரியின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பந்தலூரை சேர்ந்த பாதுஷா(வயது 19), கூடலூரை சேர்ந்த தவுலத்(28), சியாபுதீன்(34), நாடுகாணியை சேர்ந்த விக்னேஸ்வரன்(43) மற்றும் தப்பி ஓடிய லாரி டிரைவர் கோழிபாலத்தை சேர்ந்த ராஜா என்பதும், ரேஷன் கடையில் இருந்து 33 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டன் ரேஷன் அரிசி, லாரி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பிறகு கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டவைகளையும் நீலகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதியிடம் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை துரத்தி பிடித்தபோது தவறி விழுந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கவுதமுக்கு கால் மற்றும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






