வருகிற 3–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்; மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


வருகிற 3–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்; மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Oct 2018 4:30 AM IST (Updated: 30 Sept 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் வருகிற 3–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டம் மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் நடந்தது. தட்சிணாமூர்த்தி, சகாயம், எமரிட் உள்பட மீனவர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 24–ந்தேதி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வருகிற 3–ந்தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மீனவர்கள் கலந்துகொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இலங்கை கடற்படை தொல்லை, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டும், முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், சமீபத்தில் இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

மேலும் வருகிற 8–ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்ட தலைநகரங்களில் மீனவர்களை இணைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மீனவர்கள் கலந்துகொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.


Next Story