திருப்பூர்: பனியன் குடோனில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்


திருப்பூர்: பனியன் குடோனில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:06 AM IST (Updated: 4 Oct 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பனியன் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதமடைந்தன.

திருப்பூர்,

திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65). இவருக்கு சொந்தமாக கொங்குநகரில் பனியன் குடோன் உள்ளது. இதனை அவர் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திருப்பூரில் மழை பெய்து கொண்டிருந்தது.

இதற்கிடையே நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென முத்துசாமிக்கு சொந்தமான குடோனில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. கொட்டும் மழையிலும் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கொட்டும் மழையிலும் தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. மின்கசிவின் காரணமாக அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.


Next Story